சாதித்து காட்டிய உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள்
நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார் டி.ஒய். சந்திரசூட். விதிகளை மீறுபவர்களிடமும், தவறு இழைத்தவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வதோடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் செயல்பட்டு வருகிறார்.
தாராளவாத மற்றும் முற்போக்கான தீர்ப்புகளுக்காக நீதித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சமூகத்திலும் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டப்படுகிறார். அயோத்தி, தனிமனித உரிமை, சபரிமலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளின் குழுவில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சல்லிவன் & குரோம்வெல் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், தனது சட்டபடிப்பு மற்றும் மேற்படிப்பினை மேற்கொண்டவர். ஜூனியர் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய சந்திரசூட், இந்தியாவின் உச்சபட்ச பதவியை அலங்கரித்து வருகிறார்.
மனமுருகி பாராட்டிய இந்திய தலைமை நீதிபதி!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராக பணியாற்றி வருபவரின் மகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அவரை அழைத்து பாராட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள் பிரக்யா.
அமெரிக்காவில் இரண்டு பல்கலைக்கழகங்களில் முதுகலை சட்ட பட்டப்படிப்பை படிக்க பிரக்யாவுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. இதை தெரிந்து கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு பிரக்யா, அவரது தாயார் மற்றும் தந்தையை அழைத்து பாராட்டியுள்ளார். அதுமட்டும் இன்றி, அவருக்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
அதோடு, பிரக்யாவின் தாயார் மற்றும் தந்தைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பிரக்யாவை பாராட்டி பேசிய சந்திரசூட், "நீங்கள் கடினமாக உழைத்து முன்னேற விரும்பினால், தேவையான உதவிகள் அனைத்தையும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். முயற்சி செய்யும் மாணவனுக்கு தேவையான உதவிகள் கிடைக்காமல் இருக்கக்கூடாது" என்றார்.
பல சவால்களை சந்தித்து, தடைகளை எதிர்கொண்டால்தான் எதிலும் வெற்றி கிடைக்கும். உயர் நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பிடித்த கல்லூரியில் சேர்வதுதான் கனவே. தனக்கு பிடித்த கல்லூரியில் இடம் கிடைக்குமா? என எண்ணும் மாணவர்கள், பல இரவுகள் தூக்கம் இன்றி கழிக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, எளிய குடும்பத்தில் பிறந்து தடைகளை தாண்டி சரித்திரம் படைத்துள்ளார் பிரக்யா.