பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. இது, அரசியலமைப்புக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், மற்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.


இட ஒதுக்கீடு:


குறிப்பாக, 50 சதவிகித வரம்புக்கு அதிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என இந்திரா சாஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அதே உச்ச நீதிமன்றமே மீறி இருப்பதாக மூத்த தலைவர்கள் வாதம் முன்வைக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை ஜார்கண்ட் அரசு உயர்த்தி இருந்தது. அதாவது, மாநிலத்தில் சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டின் அளவை 60% லிருந்து 77% ஆக உயர்த்தும் மசோதா ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


சத்தீஸ்கர்:


இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்கள் சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி அவை சட்டங்களாகும் பட்சத்தில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்டி) 32 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.


பொருளாதாரத்தில் பின்தங்கியோர்:


பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான (எஸ்சி) இட ஒதுக்கீடு 13 சதவீதமாகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4 சதவீதம் வழங்கப்பட உள்ளது.


இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காகத்தான் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. முன்னதாக, 2012 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், பழங்குடியினரின் இடஒதுக்கீடு 20 சதவீதமாகக் குறைந்தது. 


தேர்தல்:


இதைத்தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பழங்குடியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பாஜக அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து, கல்வி நிலையங்களில் சேர்க்கையையும் அரசு பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதையும் அம்மாநில அரசு நிறுத்தியது.


தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல, மாநில அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யாதவாறு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இந்த இடஒதுக்கீட்டைப் பட்டியலிடுமாறு மத்திய பாஜக அரசை மாநில அரசு வலியுறுத்த வாய்ப்புள்ளது.