சத்திஸ்கர் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 11 வயது குழந்தை ஒன்று, 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செவ்வாய்கிழமை இரவு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.  இதை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். 


தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், உள்ளூர் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் என 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்த வெள்ளி (ஜூன் 10) முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுகுறித்து சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ட்விட்டர் பக்கத்தில், "அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு ஆழ்துளை கிணற்றிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.






 


மீட்கப்பட்ட பிறகு, பிலாஸ்பூர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் ராகுல் சாஹுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராகுலின் உடல்நிலை குறித்து விளக்கியுள்ள பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா, "அவரது உடல்நிலை சீராக உள்ளது. 


விரைவில் குணமடைவார். அவர் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் ஆம்புலன்சில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், இதற்காக சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டது. நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்.


எங்கள் குழு வெற்றி அடைந்துள்ளது. இது ஒரு சவாலான சூழல். நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வந்தார். ராகுலை நேரடியாக பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்" என்றார். 


பிஹ்ரிட் கிராமத்தில் உள்ள மல்கரோடா வளர்ச்சித் பிளாக்கை சேர்ந்த ராகுல், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் வீட்டின் பின்னே அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.


ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் கிராமவாசிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  பின்னர், மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 


இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு அவரது வீட்டு முற்றத்தில் உள்ள காய்கறி தோட்டத்தில் முன்பு தோண்டபட்டு தண்ணீர் கிடைக்காததால், அது பயன்படுத்தப்படாமல், மூடப்படாமல் கிடந்ததாக குழந்தையின் தந்தை கூறினார்" என்றார்.