"செஸ்ஸின் தலைநகரம் சென்னை" பாராட்டி தள்ளிய பியூஷ் கோயல்!
விஸ்வநாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களையும் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி போன்ற வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும் சென்னை நமக்கு அளித்துள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
செஸ்ஸின் தலைநகரமாக சென்னை திகழ்வதாகவும் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களையும் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி போன்ற வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும் சென்னை நமக்கு அளித்துள்ளதாகவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்டியுள்ளார்.
துக்ளக் ஆண்டு விழா:
சென்னையில் இன்று நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 'இந்தியாவின் எழுச்சி மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய பியூஷ் கோயல், “தேசம் சந்திக்கும் குறிப்பிடத்தக்க எழுச்சியானது, தெளிவான கோட்பாடுகளில் வேரூன்றிய 5 ‘டி’களால் ஆனது.
அதாவது, ஜனநாயகம், மக்கள்தொகை ஈவுத்தொகை, பன்முகத்தன்மை, தேவை மற்றும் சார்பு ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட, விளைவு சார்ந்த அணுகுமுறையின் விளைவாகும். உலகளாவிய தலைமைத்துவத்தில் இந்தியாவின் எழுச்சி, உலக அரங்கில் அதன் வளர்ந்து வரும் செல்வாக்கு, மதிப்புமற்றும் ராஜதந்திரத்திற்கு ஒரு சான்றாகும்.
தமிழ்நாட்டை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர்:
பண்டைய இந்திய தத்துவத்தில் வேரூன்றிய இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளான “வசுதைவ குடும்பகம்” திருவள்ளுவரின் ஞானத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. பாரத மண்டபத்தில் உள்ள 27 அடி நடராஜர் சிலை தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.
உலகளாவிய மென் சக்தியாக இந்தியாவின் எழுச்சி விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் புதுமைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளில் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு, குறிப்பாக இந்தியாவின் சதுரங்கத்தின் தலைநகரமாக சென்னை உள்ளது.
விஸ்வநாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களையும் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி போன்ற வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும் நமக்கு அளித்துள்ளது" என்றார்.
அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு பேசிய பியூஷ் கோயல், "நாம், உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும் அதே வேளையில், நமது ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் விருப்பங்களை சோதிக்கும் உலகின் வளர்ந்து வரும் யதார்த்தங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஆதாயங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்பவர்களிடமிருந்து நமது முன்னேற்றம் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இருப்பினும், இந்தியாவின் உயர்வுக்கு உந்துதலாக இருந்த அதே நெகிழ்வுதன்மை, இந்தத் தடைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.