சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னுடைய பாட்டியை கொலை செய்து அவரின் ரத்தத்தில் ஒருவர் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாட்டியை நரபலி கொடுத்துவிட்டு அந்த நபர் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.


பாட்டியின் ரத்தத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம்:


துர்க் மாவட்டத்தில் நந்தினி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நன்கட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூடநம்பிக்கையால் அவர் இப்படி செய்திருக்கலாம் என காவல்துறை அதிகாரி சஞ்சய் பண்டிர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று, ருக்மணி கோஸ்வாமி (70) என அடையாளம் காணப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.


குற்றம் சாட்டப்பட்ட குல்ஷன் கோஸ்வாமி (30), ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அதிகாரி, "முதற்கட்ட தகவலின்படி, குல்ஷன் தனது பாட்டியுடன் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். கோயிலில் தினமும் சடங்குகள் செய்து வந்தார்.


நேற்று மாலை, அவர் தனது பாட்டியை அவர்களின் வீட்டில் திரிசூலத்தால் கொன்று, கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்துள்ளார். பின்னர், வீடு திரும்பிய அந்த நபர் தனது கழுத்தில் அதே திரிசூலத்தால் தன்னைத்தானே குத்தி கொண்டார்.


நரபலி சம்பவம்:


மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) குல்ஷன் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் விளைவாக நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.


மூடநம்பிக்கை என்பது மக்களை காலம் காலமாக மூட்டளாக்கி வருகிறது. நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்புவது என்பது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், கேரளாவில் நடந்த நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.


மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்தபோதிலும், அது நின்றபாடில்லை. அதன் தொடர்ச்சியாக நடந்துள்ள சத்தீஸ்கர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.