புதிய ஊதிய விதிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் வரைவு சட்டங்களை இயற்றியுள்ளது. இருப்பினும், வரைவு சட்டங்களை வகுக்க மாநிலங்கள் அதிக நேரம் எடுத்து கொண்டதால் புதிய தொழிலாளர் சட்டத்தை அமலாக்க கால தாமதம் ஆகியுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. 


அரசு இந்தப் புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தாலும், பல மாநிலங்கள் இன்னும் புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தில், தொழிலாளர் தொடர்பான விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், இதற்கு மாநிலங்கள் கட்டாயமாக ஒப்புதல் வழங்க வேண்டும். 


ஊதிய விதிகள் 2019இன் கீழ், இதுவரை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன. 


விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தொழிலாளர் விதிகளால் ஊழியர்களின் வேலை நேரம், அவர்களின் சம்பளம் விடுப்பு முறை பாதிப்பை சந்திக்க உள்ளன. புதிய ஊதிய விதிகளின்படி, பணியாளரின் கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஊதியங்கள் மற்றும் நிலுவைத் தொகையை முழுமையான அளிக்க வேண்டும்.


இதேபோல், நிறுவனங்கள் தேவைப்பட்டால் ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் கூடுதல் விடுப்பு வழங்க வேண்டும். புதிய ஊதிய விதிகளின்படி அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும். இது பணியாளர் மற்றும் முதலாளி ஆகிய இருவரின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பை அதிகரிக்கும்.


ஏற்கனவே இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு பதில், 2019 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த தொழிலாளர் சட்டம் அமலுக்கு வருகிறது. ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை தொடர்பான நான்கு புதிய விதிகள்  ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்தது.


கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் மொத்த நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்


ராஜினாமா செய்தாலோ, நிறுவனமே நீக்கினோலோ, பணியாளரின் கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஒரு நிறுவனம் ஊதியத்தின் முழு மற்றும் இறுதி நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்பது புதிய சட்டத்தின் படி கட்டாயமாகிறது. தற்போது, ​​முழு மற்றும் இறுதி நிலுவை தொகையை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான காலத்திற்குள் அளிப்பது நடைமுறையில் இருக்கிறது.


அதிகரிக்கும் ஊழியர்களின் வேலை நேரம்


புதிய ஊதிய விதிகளின்படி, ஊழியர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்க நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.


இருப்பினும், அவர்கள் ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும். எனவே, வேலை நேரம் அதிகரித்தால், தற்போதுள்ள 5க்கு பதிலாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணியாளர்கள் பணிபுரிவார்கள்.


பணியாளர்களுக்கு வாரந்தோறும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் 48 மணி நேர வேலை என்ற குறைந்தபட்ச தேவையுடன் இது தொடர்கிறது. ஒரு ஊழியர் வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், முதலாளி கூடுதல் நேரக் ஊதியத்தை வழங்க வேண்டும்.


கைக்கு வரும் சம்பளம் குறைகிறது


புதிய சட்டத்தின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50% ஆக இருக்க வேண்டும். இது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தைக் குறைத்து, பணியமர்த்துபவர் மற்றும் பணியாளர் இருவரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை அதிகரிப்பதால், ஓய்வூதிய சேமிப்பு அதிகரிக்கும்.