ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சந்திரயான் 3 ஏவுகணையில் இருந்த விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தன் கால்தடத்தை பதித்தது. இதை ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.


இந்தியாவிற்கு இந்த பெருமையான தருணத்தை ஏற்படுத்தித்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:


வரலாறு படைக்கப்பட்ட நாட்கள் உண்டு. இன்று சந்திரயான் 3 பயணத்தின் வெற்றிகரமான நிலவில் தரையிறங்குவதன் மூலம், நமது விஞ்ஞானிகள் வரலாற்றை உருவாக்கியது மட்டுமல்லாமல், புவியியல் யோசனையையும் மறுவடிவமைத்துள்ளார்.


இது உண்மையிலேயே ஒரு முக்கியமான நிகழ்வு, வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு, இது அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. இஸ்ரோ மற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், மேலும் அவர்கள் இன்னும் பெரிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.


சந்திராயனின் வெற்றி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு பெரிய சாதனை என்று நான் நம்புகிறேன். மனிதகுலத்தின் சேவையில் இந்தியா எவ்வாறு நவீன அறிவியலுடன் அதன் வளமான பாரம்பரிய அறிவுத் தளத்தைப் பயன்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது.


பிரதமர் மோடி:


ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி; நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம். இஸ்ரோ மாபெரும் சாதனை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் கால்தடம் பதித்த நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தியுள்ள மகத்தான சாதனை இது. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள். இந்திய விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்.


எடப்பாடி பழனிசாமி: (எதிர்க்கட்சித் தலைவர்)


நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமிதம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். விக்ரம் லேண்டரை தரையிறக்கியதன் மூலம் எந்த விண்வெளி சக்திகளும் செய்ய முடியாத வெற்றியை இஸ்ரோ அடைந்துள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் சோமநாத்,  திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், சந்திரயான் இயக்க முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவனுக்கும் வாழ்த்துகள். இந்த சாதனையை சாத்தியமாக்கியதற்கும், உலகின் எதிர்காலத்திற்கு பங்களிக்க நமது தேசத்தை தூண்டுவதற்கும் பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.


ஓ.பன்னீர்செல்வம் ( முன்னாள் முதலமைச்சர்)


நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன்மூலம் விண்வெளியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. விண்வெளியில் சரித்திரச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். விண்வெளியில் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது நல்வாழ்த்துகள்.


ராமதாஸ்: (பா.ம.க. நிறுவனர்)


விண்வெளியில் வியத்தகு சாதனையை படைத்தது இந்தியா; நிலவில் சந்திரயான் 3-ஐ தரையிறக்கி சாதனை படைத்த தமிழர் தலைமையிலான அறிவியலாளர்களுக்கு பாராட்டு! சென்னைக்கு அருகில் ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி தொடங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் 41 நாட்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் நிறைவடைந்து சாதனையாக மாறியிருக்கிறது. பதட்டம் நிறைந்த கடைசி 19 நிமிட தரையிறங்கல் நிகழ்வுக்குப் பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவில் தடம் பதித்த உலகின் நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை படைத்த குழுவின் தலைவரான வீரமுத்துவேல் எங்கள் விழுப்புரம் மாவட்ட மண்ணின் மைந்தர் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. சாதனைக்கு காரணமான அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்!


அன்புமணி ராமதாஸ்: (பா.ம.க. தலைவர்)


நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3. இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் - மகிழ்ச்சி!!! ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் நாள் வெண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு இன்று மாலை நிலவில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த நாள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பொன் நாள். இந்த வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:


இஸ்ரோவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். சந்திரயான் 3 தரையிறக்கத்தை அற்புதமாக அடைந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையை  இந்தியா உருவாக்கியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுமனப்பான்மை இந்த நம்ப முடியாத பெருமையை நமக்கு கொண்டு வந்துள்ளது.