சுமார் 15 நாட்கள் விண்வெளியின் வெற்றிடத்தில் பயணித்த பிறகு, சந்திரயான்-3 நிலவுக்குச் செல்லும் பாதையில் நுழைய உள்ளது.  இந்த நிகழ்வு நாளை அதிகாலை (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) 1 மணி அளவில் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான், விண்கலத்தை நிலவிற்கு அருகில் கொண்டு செல்ல பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து நெடுந்தொலைவிற்கு செல்ல உந்துதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு 170 கிலோமீட்டர் தூரத்தை விண்கலம் அடையும்போதெல்லாம் உந்துதல் சக்தி கொடுக்கப்பட்டு நிலவை நோக்கி தள்ளிவிடப்படும். விண்ணில் செலுத்தப்பட்ட நாளிலிருந்து அடுத்த 19 நாட்களுக்கு (ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை) இந்த பணி தொடரும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதள் நாலை அதிகாலை 1 மணிக்கு சந்திரயான் 3 நிலவுக்கு செல்லும் பாதையில் நுழைகிறது. இந்த நிகழ்வு சுமார் 30 நிமிடங்கள் வரை இருக்கும். நிலவின் பாதையில் நுழையும் போது சந்திரயான் 3 தனது அதிகபட்ச உந்துதல் சக்தியை பயன்படுத்தும். Trans Lunar Injection என்பது விண்கலத்தை பூமியின் நீள்வட்டப்பாதையில் இருந்து குறிப்பிடத்தக்க நிலவு பாதையில் அமைப்பது ஆகும். விண்கலத்தில் இது ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த கட்டத்தில் வெற்றியடைந்தால், அடுத்தடுத்த கட்டங்கள் அனைத்தும் சவாலானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மீதமுள்ள  கட்டங்கள்:



  • அடுத்தகட்டமாக நிலவு பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருப்பது தான் ஐந்தாவது கட்டம். இதனை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்

  • சம ஈர்ப்பு விசை புள்ளிக்குச் சென்ற விண்கலம் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் செல்ல உந்துதல் கொடுக்கப்படுவது ஆறாவது கட்டம்.

  • நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்த பிறகு சந்திரயான் 3 விண்கலனை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும் என்பது ஏழாவது கட்டம்

  • விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது எட்டாவது கட்டம்.

  • ஒன்பதாவது கட்ட செயல்முறைசந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது. விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என்ற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இவை அனைத்தும் வெறும் 15 நிமிடங்களில் நிகழ வேண்டும்.

  • இறுதிக்கட்டமாக, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் பயணித்து நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தான் சந்திரயானின் 10வது கட்டமாகும்.