இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான் 3 விண்கலம், இன்று பிற்பகல் விண்ணில் பாய உள்ளது.


சந்திரயான் 3 விண்கலம்:


140 கோடி இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுமே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலத்தை உற்று நோக்க தொடங்கியுள்ளன. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிடங்கள் அளவிலான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில்,   இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:35 மணிக்கு  சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.





சந்திரயான் திட்டம்:


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.


சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.


சந்திரயான் 3 திட்டம்:


சந்திரயான் 3 தயார் செய்யும் பணிகள் மிகவும் திவிரமாக இஸ்ரோ மேற்கொண்டது. குறிப்பாக கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். அந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க  பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் இன்ஜினின் சோதனை  அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.


விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3:


இப்படி பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் இன்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சந்திரயான் 2 தோல்வியில் இருந்து கிடைத்த பல்வேறு படிப்பினைகள் அடிப்படையில், சந்திரயான் 3 கட்டமைப்பு, தொழில்நுட்பம் என பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவில் கால் பதிக்கப் போகும் நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா பெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.