உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதில், திடீர் திருப்பமாக, கடைசி நிமிடத்தில் இடம் மாறி இறங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம்? பார்க்கலாம்.


விண்வெளி ஆராய்ச்சியில் தற்சார்பு பெறும் வகையில் 1969ஆம் ஆண்டு பிரதமர் நேரு ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். ஆரம்ப கட்டத்தில்  சைக்கிளில் ராக்கெட்டின் உதிரி பாகங்களைக் கொண்டு சென்ற இஸ்ரோ, தற்போது யாரும் செய்திடாத மற்றும் செயற்கரிய சாதனைகளை படைத்து உலகை வியக்கச் செய்து வருகிறது.


அதில் ஒரு புதிய மைல் கல்லாகதான், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாப் பெற்றுள்ளது. 


இந்த நிலையில், சந்திரயான் திட்டம் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் அல்ல யூடியூபிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது. சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்குவதை யூடியூப் லைவில் மட்டும் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இதற்கு முன்பு, ஸ்பேயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லைவை 34 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இதுவே உலக சாதனையாக இருந்தது. தற்போது, சந்திரயான் 3 லைவை 36 லட்த்திற்கும் மேற்பட்டோர் பார்த்ததன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 


திரை மறைவில் அதிரடி சம்பவம்


இந்த நிலையில் சந்திரயான் 3 வெறும் 19 நிமிடத்தில் நிலவில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் இருந்து தரை இறங்கியுள்ளது. படுக்கை நிலையில் இருந்த விண்கலம், நேர் நிலைக்குத் திரும்பியுள்ளது. பல லட்சம் பேர் கண்ட நேரலை நிகழ்வுக்குப் பின்னால் திரை மறைவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தரை இறங்கும் பணி தொடங்கிய 17ஆவது நிமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது விண்கலம் நிலவின் தரையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் இருந்தது.  


அந்த விண்கலம் நிலவின் கீழே எதோ ஆபத்து இருக்கிறது என்று லேண்டரில் உள்ள இடர் உணர், ஆபத்து தவிர் திறன் கேமரா அறிந்துகொண்டது. அதைத் தெரிந்துகொண்ட சந்திரயான், சற்றே பக்கவாட்டில் நகர்ந்து, ஆபத்தில்லாத வேறோர் இடத்தில் தரையில் இறங்கி உள்ளது. இது நம் யாருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் இஸ்ரோ வளாகத்தில் அமர்ந்து இருந்த விஞ்ஞானிகள் முகத்தில் ஒரு நொடி கலக்கம், தயக்கம் வந்து போனதைப் பார்த்திருக்கலாம்.


பள்ளத்தைக் கண்டறிந்து தவிர்த்த லேண்டர்


விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு, வெற்றிகரமாக, சரியாக வேலை செய்து, இடரைக் களைந்து சரியான இடத்தில் இறங்கி உள்ளது. தொழில்நுட்பத்தை உறுதிசெய்தல் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.