சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து நேற்று புரபல்சன் பகுதியில் இருந்து பிரிந்து வந்த லேண்டரின் உயரம் குறைக்கும் பணி இன்று வெற்றிகரமாக நிகழந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


சந்திரயான் 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்த 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்தது. 


நிலவை நோக்கி சந்திரயான் 3:


இதனைத்தொடர்ந்து, நிலவில் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திரயான் – 3 கடந்த 6ம் தேதி முதன்முறையாக, நிலவை நோக்கி தள்ளப்பட்டது. அதன் பின்பு கடந்த 9, 14 மற்றும் 16 ஆம் தேதி என அடுத்தடுத்து சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தூரம் திட்டமிடப்பட்டபடி குறைக்கப்பட்டு நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாக தனியாக நேற்று பிரிந்தது. இதனிடையே, லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.  


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் அடுத்தகட்ட பணி, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புரபல்சன் அமைப்பு தொடர்ந்து தற்போதுள்ள சுற்றுவட்டப் பாதையிலேயே சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பயணிக்கும்.  இந்த பயணத்தின்போது  அதில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மூலம் பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து மேகங்களிலிருந்து துருவமுனைப்பு மாறுபாடுகளை அளவிடும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


நிலவை நோக்கி லேண்டர் பயணம்:






நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் முதல் கட்ட பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 20 ஆம் தேதி மீண்டும் விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து லேண்டர் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் நகர்த்தப்படும். அதாவது சுற்றுப்பாதை தூரத்தை படிப்படியாக குறைக்கும். அப்படி குறைந்தபட்ச தூரத்தை எட்டிய பின், லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் நான்கு குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும்.  அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து ரோவர் வெளியே வரும். ரோவர் தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். அதன்படி வரும் 23-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் கீழே இறங்கி நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி  கட்டமாகும்.