நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு:
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் தேர்தல் பேரணியின் போது நேற்று கல்வீச்சினால் தாக்கப்பட்டார். இந்நிலையில், இன்று கஜுவாகாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான என். சந்திரபாபு நாயுடு மீதும் கற்கள் வீசப்பட்டதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அவர் மீது கற்கள் விழவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில் “இங்கு கற்கள் வீசப்பட்டன. மக்கள் அவர்களை ஓட விடமாட்டார்கள், விரட்டுவார்கள். கஞ்சா, பிளேடு கும்பல்களும் இங்கு வந்துள்ளன. போலீசார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று நடந்த நாடகத்தையும் சொல்கிறேன். விஜயவாடாவில் நடந்த நாடகத்தை நாங்கள் பேசுவோம்” என்று நாயுடு கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோபத்தை வெளிப்படுத்திய நாயுடு, மாநில காவல்துறையின் செயலற்ற தன்மை இருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்கு காரணமானவர்கள் 'அம்பலப்படுத்தப்படுவார்கள்' என்றும் எச்சரித்தார். "நான் அவர்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன். இதுபோன்ற மலிவான தந்திரங்களை அவர்கள் தொடர்ந்தால், மக்கள் கிளர்ச்சி செய்து அவர்களை அம்பலப்படுத்தி தண்டிப்பார்கள்.
ஜெகன் ரெட்டி, உங்கள் கேங்கைக் கட்டுப்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார். பவன் கல்யாண் இன்று தெனாலியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தபோது, அவர்கள் அவரது வாராஹி வாகனத்தின் மீது கற்களை வீசினர், ”என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.