Chandrababu Naidu: ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் சந்திரபாபு நாயுடு.. 11 நாள்களுக்கு காவலை நீட்டித்த விஜயவாடா நீதிமன்றம்

சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சந்திரபாபு நாயுடு இன்னும் சிறையில் இருப்பதால் ஆந்திராவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

Continues below advertisement

ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அம்மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.

Continues below advertisement

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியது.

ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் சந்திரபாபு நாயுடு:

தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவரின் காவலை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்தது.

சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவிடம் கடந்த இரண்டு நாள்களாக சிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். இன்றுடன் அந்த காவல் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், காணொளி காட்சி வாயிலாக நீதிபதி முன் ஆஜரானார். விசாரணையின்போது அதிகாரிகள் தங்களை துன்புறுத்தினார்களா? என அவரிடம் நீதிபதி ஹிமா பிந்து கேள்வி எழுப்பினார். மேலும் விசாரணைக்காக நாயுடுவின் காவலை நீட்டிக்குமாறு சிஐடி நீதிமன்றத்தில் கோரியது. மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி கேட்டுக் கொண்டார்.

விஜயவாடா நீதிமன்றம் அதிரடி:

இதைத்தொடர்ந்து, அவரின் காவலை 11 நாள்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில், இந்த ஊழல் வழக்கின் 37ஆவது குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு சேர்க்கப்பட்டார். ஆனால், தற்போது முக்கிய குற்றவாளியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை சேர்த்துள்ளது. அவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு  நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதில் இருந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் தெலங்கு தேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

மாநில தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் கூட இல்லாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement