அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ராமர் சிலை நிறுவப்படும் என ராமஜென்மபூமி அறக்கட்டளை அண்மையில் அறிவித்தது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகள் உரிய நேரத்தில் முடிவடையும்.  வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் கோயிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி வரவுள்ள மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கருவறையில் சிலை நிறுவப்பட்டதும், அதைத்தொடர்ந்து கோயில் திறக்கப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதமே கோயில் திறப்பு கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கி விடும்” என தெரிவிக்கப்பட்டது.


6 பிரமாண்ட நுழைவு வாயில்கள்:


பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஆறு பிரமாண்ட நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கோயிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கியது முதலே, அப்பகுதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லக்னோ, கோரக்பூர், ரேபரேலி, கோந்தா, ப்ரயாக்ராஜ் மற்றும் வாரனாசி ஆகிய நகரங்கள் வழியாக தான் பக்தர்கள், அயோத்யா பகுதிக்கு வந்து செல்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக குறிப்பிட்ட ஆறு நகரங்களிலும், பிரமாண்ட நுழைவு வாயிலை அமைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.


நுழைவு வாயில்களின் பெயர்கள்:


அவ்வாறு அமைக்கப்படும் நுழைவு வாயில்களுக்கு ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளன. அதன்படி, லக்னோ நகர் வழியாக வரும் பக்தர்களுக்காக அமைக்கப்படும் நுழைவு வாயிலுக்கு ஸ்ரீராமர் பெயரும்,  கோரக்பூர் சாலையில் இருந்து வரும் பக்தர்களுக்கான நுழைவு வாயிலுக்கு ஹனுமான் பெயரும் சூட்டப்பட உள்ளது. அலகாபாத் நகரிலிருந்து வரும் பக்தர்களுக்காக அமைக்கப்படும் நுழைவு வாயிலிற்கு  பரதனின் பெயரும்,  கோண்டா சாலையில்  அமைக்கப்படும் நுழைவுவாயிலுக்கு லட்சுமணன் பெயரும், வாரணாசி சாலையில் அமைக்கப்படும் நுழைவுவாயிலுக்கு ஜடாயுவின் பெயரும்,  மற்றும் ரேபரேலி நகரிலிருந்து வருபவர்களுக்காக அமைக்கப்படும் நுழைவு வாயிலுக்கு கருடரின் பெயரும் சூட்டப்பட உள்ளது.


உலகத்தரம் வாய்ந்த வசதிகள்:


ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் பக்தர்களுக்கான பெரிய வாகன நிறுத்துமிடங்கள், கழிவறைகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என, அயோத்தி மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.


கோயில் வரலாறு:


வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1990களில், ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்திதான், தேசிய அளவில் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுத்தது.


தற்போதைய மதிப்பீட்டின்படி, ராமர் கோயில் மற்றும் வளாகத்தின் மொத்த கட்டுமானச் செலவு தோராயமாக 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என ராமர் கோயில் அறக்கட்டளை கணித்துள்ளது. சன்னதி மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தள மேல்கட்டமைப்பின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன என அறக்கட்டளை சமீபத்தில் தெரிவித்தது.


ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியை கட்டுவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ள அறக்கட்டளை இது தொடர்பான தகவலை பகிர்ந்தது.