ஜார்கண்ட் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 






சரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள ஜிலிங்கோடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிமால் சோரனின் மூத்த மகன் சம்பாய் சோரன். தந்தையுடன் சேர்ந்து தனது பண்ணைகளில் வேலை செய்து வந்தார் சம்பாய் சோரன். அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். 90களின் பிற்பகுதியில் ஷிபு சோரனுடன் இணைந்து ஜார்கண்ட் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டவர் சம்பாய் சோரன். தனது செயல்பாடுகள் மூலம் 'ஜார்கண்ட் புலி' என மக்கள் அவரை அழைத்தனர். சரைகேலா தொகுதி இடைத்தேர்தல் மூலம் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.


அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக ஆட்சியில் சம்பாய் சோரன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அவர் முக்கியமான துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2010ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 2013ஆம் ஆண்டு, ஜனவரி 18ஆம் தேதி வரை அமைச்சராகப் பதவி வகித்தார். குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஹேமந்த் சோரன் மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது, ​​சம்பாய் சோரன் உணவு மற்றும் சிவில் சப்ளை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.