கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது. 


கர்பப்பை வாய் புற்றுநோய்


2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரம் பெண்கள் கர்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். பொதுவாக, கர்பப்பை வாய்  புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். பிந்தைய நிலைகளில், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.  


கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது HPV காரணமாகும். இது தொண்டை, பிறப்புறுப்பு மற்றும் தோலை பாதிக்கும். இது பொதுவாக உடலுறவு மூலம் பரவும் தொற்று ஆகும். உடலுறவில் சுறுசுறுப்பான நபர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில், அறிகுளிகளே இல்லாமல் இந்த  நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 


தடுப்பூசி யாரெல்லாம் போடலாம்?


தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் கர்பப்பை வாய் புறுநோய் மட்டுமே. செர்வாவாக் எனப்படும் நாட்டின் முதல் HPV தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செர்வாவாக் (Cervavac)  என்பது இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் HPV தடுப்பூசி ஆகும்.


 9 முதல் 26 வயதுடைய பெண்கள்  இந்த செர்வாவாக்  தடுப்பூசியை பயன்படுத்தலாம். முன்னதகா 18 வயதுக்கு  மேற்பட்டவர்கள் HPV தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று இருந்தது. பின்னர்,  இடைக்கால பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 வயதில் இருந்தே HPV தடுப்பூசியை செலுத்த அரசு ஊக்குவிப்பதாக தெரிவித்தார். 


விலை நிலவரம் என்ன?


எனவே, 9 வயது 24 வயதுடைய பெண்கள் செர்வாவாக் எனப்படும் HPV தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.  மேலும், கார்டசில் (Gardasil)  என்ற தடுப்பூசி பெரும்பாலான புற்றுநோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று. இந்த தடுப்பூசியை 9 முதல் 45 வயதுடைய ஆண்டுகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.  


இந்த கார்டசில்  தடுப்பூசியை கர்பப்பை வாய் புற்றுநோய்க்கும் பயன்படுத்தலாம் என்று பிரபல மருத்துவர் தன்யா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான விலை பட்டியலையும் கூறியிருக்கிறார் மருத்துவர் தன்யா.  அதன்படி, ஒரு டோஸ் கார்டசில் தடுப்பூசியின் விலை ரூ.4,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும். அதேபோல, இந்தியாவின் செர்வாவாக்  HPV தடுப்பூசியின் விலை ஒரு டோஸ் ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரை இருக்கும் என்று மருத்துவர் தன்யா தெரிவித்துள்ளார். 


அறிகுறிகள் என்ன?


உலக சுகாதார அமைப்பின்படி, கர்பப்பை வாய் புற்றுநோயுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,  மாதவிடாய்க்கு இடையில், மாதவிடாய் நின்ற பிறகு அல்லது உடலுறவுக்குப் பிறகு அசாதாரண இரத்தப்போக்கு அதிகரித்த அல்லது துர்நாற்றம் கொண்ட யோனி வெளியேற்றம் முதுகு, கால்கள் அல்லது இடுப்பில் தொடர்ந்து வலி போன்ற அறிகுறிகள் எடை இழப்பு, சோர்வு மற்றும் பசியின்மை பிறப்புறுப்பு அசவுகரியம் கால்களில் வீக்கம் போன்றவை அறிகுறிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.