Monkeypox ; குரங்கு அம்மை நோய்க் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசின், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும்,  பொது சுகாதார சேவைகள் இயக்குனரகம் டெல்லியில் இன்று அலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறது. நேற்று உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை நோய் பரவலின் காரணமாக, சர்வதேச சுகாதார எமர்ஜென்ஸியாக அறிவித்த நிலையில், இன்று மத்திய அரசின் உயர் மட்டக் குழு அவசர அலோனைக் கூட்டம் நடத்தவிருக்கிறது. 


நேற்று குரங்கம்மை நோயின் பரவலை சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. உலகம் முழுவதும் தீவிரமாக குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார எமர்ஜென்சி எச்சரிக்கை அறிவித்துள்ளது.  குரங்கம்மை தொற்று நோய்  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்பதால், இதற்காக ஊரடங்கு குறித்து எந்த அறிவிப்போ, வழிகாட்டலோ உலக சுகாதார அமைப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை. 





இது குறித்து WHO அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரெயேசூஸ், " சுமார் 75 நாடுகளில், 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன," என்று கூறினார். இதனால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என கூறினார். மேலும், இத்தாலி, போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குரங்கம்மை நோய் பரவல் கண்டறியப்பட்டிருந்தாலும், அண்மையில்  ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் இதன் பரவல்  உறுதியானது. 


அதிகப்படியான மக்கள் தொகையினை கொண்ட இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, இம்மாதம் (ஜூலை) 14-ஆம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் மத்திய அரசின் சுகாதாரக் குழு கேரளா விரைந்தது. அதைத் தொரடர்ந்தும் இரண்டாவதாக, 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது  அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 



தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தீவிரப்படுத்தப்பட்டன. 


இந்நிலையில், இன்று (24/07/2022) டெல்லியில் 34 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர் லோக் நாயக் மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இந்நில்லையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால், “ மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், நம்மிடம் இருக்கும் மிக திறமையான வல்லுநர்களைக் கொண்டு நோய் பரவலை தடுப்பதற்கான திட்டம் தீட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், லோக் நாயக் மருத்துவமனையில் அதிகப்படியான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்”.  இன்று மாலை  நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நோய் பரவல் தடுப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.