நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு கருத்து பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஒரே பாலின உறவுகள் மற்றும் மாற்றுப் பாலின உறவுகள் இரண்டுமே தனித்துவமான உறவுகள் என்றும், அவற்றை ஒரே மாதிரியாகக் கருத முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
2018ஆம் ஆண்டில் தன்பாலின காதல் என்பது குற்றமற்றது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அளித்தது. இது அச்சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் 7ஆம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனை சட்டத்தின் 377ஆவது சட்டப்பிரிவை நீக்கி, இந்தியாவில் தன்பாலின காதல் குற்றமற்றது என உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களின் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.
இந்நிலையில், தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த அந்த மனுக்களின் விவரம் வருமாறு: திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மனுதாரர்கள், திருமணம் மற்றும் அதோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களை மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். மேலும், குடும்ப வன்முறை சட்டம் உள்ளிட்ட பிற விதிகளை, தன்பாலின உறவாளர்களின் திருமணங்களுக்கு செயல்படுத்த இயலாது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு , மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மத்திய அரசு எதிர்ப்பு:
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு, ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது என்பது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல. கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த பதில் மனுவை மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்
உலகெங்கிலும் குறைந்தது 32 நாடுகள் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை அங்கீகரிக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, தைவான் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கின்றன.
அமெரிக்கா
உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்கா 2015ம் ஆண்டில் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை அங்கீகரித்தது, திருமணத்தை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மட்டுமேயான அம்சமாகக் கட்டுப்படுத்துவது சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பிற்கான 14வது சட்டத் திருத்தத்தின் உத்தரவாதத்தை மீறுவதாக அமெரிக்க உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதன் தீர்ப்புக்கு முன், 36 மாநிலங்கள் ஏற்கனவே தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளன, மேலும் உச்ச நீதிமன்றம் இறுதியாக 2015 இல் ஃபெடரல் அளவில் அதே உரிமையை உறுதி செய்தது.
நியூசிலாந்து
நியூசிலாந்து 1986ம் ஆண்டில் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை குற்றமற்றது என்றும் 2005ம் ஆண்டு முதல் தன்பால் ஈர்ப்பு ஜோடிகளுக்கு இடையே உள்ள சிவில் திருமணத்தையும் அந்த நாடு அங்கீகரித்து வருகிறது. 2013ம் ஆண்டில், நியூசிலாந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு ஆனது.
தைவான்
தைவான் 2019 இல் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. தைவானில் ஆண்டுதோறும் நடைபெறும் ப்ரைட் அணிவகுப்பில் ஆசியா முழுவதிலும் இருந்து மக்கள் பங்கேற்கின்றனர்.
ஜெர்மனி
2017ல் ஜெர்மனி தன்பால் ஈர்ப்புத் திருமணத்திற்கான சட்டத்தை நிறைவேற்றியது.