நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்களில் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பகிர்ந்துள்ளார். 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில், பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என மொத்தம் 6,180 பணியிடங்கள், 18,956 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.


இதேபோல், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) 11,170 பணியிடங்களில் மொத்தம் 4,502 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்), 1,566 ஆசிரியர் பணியிடங்களில் 493 பணியிடங்கள் காலியாக உள்ளன.


இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் அவற்றை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயலாகும். மத்திய பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அமைப்புகளாகும். அவை அந்தந்த மத்திய சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. 


பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகள், வழிகாட்டுகளுக்கு ஏற்ப மத்திய கல்வி நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு முறையை அமைப்புகள் வடிவமைத்துள்ளது.


அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் (HEIs) பணியிடங்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிரப்ப உத்தரவிட்டுள்ளேன். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணியிடங்களை நிரப்ப கடிதம் எழுதியதுடன், மாதாந்திர கண்காணிப்பு பொறிமுறையை அமைச்சகம் அமைத்துள்ளது.


மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐஎம்களில் காலியாக உள்ள பணியிடங்களில் எஸ்சி பிரிவினருக்கு 961 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 578 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 1,657 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 643 பணி இடங்களும் மாற்று திறனாளிகளுக்கு 301 பணி இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


ஜூலை 9ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர் பணியிடத்தில் இடஒதுக்கீடு) சட்டம், 2019, அரசிதழில் வெளியடப்பட்டது. இதன் கீழ் பல்கலைக்கழகத்தை ஒரு அலகாகக் கருதி இட ஒதுக்கீடு பட்டியல்களைத் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது.


மேலும், சட்டத்தின்படி, அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிவிலக்குகள் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பொருந்தும். 


இச்சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களில் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் அனைத்து பணியிடங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, எந்த இடஒதுக்கீடு பணியிடத்தை இட ஒதுக்கீடு இன்றி நிரப்பப்படாது" என்றார்.


நாட்டில் மொத்தம் 23 ஐஐடிகளும் 20 ஐஐஎம்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.