Hyderabad Liberation Day: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். 


ஐதராபாத் விடுதலை தினம்:


இனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி ஐதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ”ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 13 மாதங்களுக்கு ஐதராபாத் சுதந்திரம் பெறவில்லை, நிஜாம்களின் ஆட்சியின் கீழ் அது தொடர்ந்தது. 'ஆபரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நிஜாமின் ஆட்சியில் இருந்து ஐதராபாத் விடுவிக்கப்பட்டது. எனவே, செப்டம்பர் 17ம் தேதியை ஐதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாடலாம் என்று அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், ஐதராபாத்தை விடுவித்த தியாகிகளை நினைவுகூறும் வகையிலும், இளைஞர்களின் மனதில் தேசபக்தியின் சுடரைப் புகுத்துவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதியை 'ஐதராபாத் விடுதலை நாளாக' கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மோடி வெளியிட்ட அறிவிப்பு:


செப்டம்பர் 17, 2022 அன்று தெலுங்கானா விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததது. இதையொட்டி பேசிய பிரதமர் மோடி, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதியை தெலங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது  செப்டம்பர் 17ம் தேதியை 'ஐதராபாத் விடுதலை நாள்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிராந்திய சூழலுக்கு ஏற்ப பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


'ஐதராபாத் விடுதலை நாள்' வரலாறு:



அரசாங்க அறிக்கையில், ”இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ​​ரசாக்கர்கள் ஐதராபாத் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் அல்லது இந்திய யூனியனுடன் இணைவதை எதிர்த்து முஸ்லீம் ஆதிக்கமாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், இப்பகுதியை இந்திய யூனியனில் இணைக்க அப்பகுதி மக்கள் ரசாக்கர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக வீரத்துடன் போராடினர்.  ரசாக்கர்களின் போராளி அமைப்புகள் அட்டூழியங்களைச் செய்து, ஐதராபாத்தில் முந்தைய நிஜாம் ஆட்சியைப் பாதுகாத்தனர். செப்டம்பர் 17, 1948 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, நிஜாம்களின் ஆட்சியின் கீழ் இருந்த அப்போதைய ஐதராபாத் மாநிலம், இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.