பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. கணக்கெடுப்பு பணியை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, முதல் கட்ட பணி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஜனவரி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.


சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு:


முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில் மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி, மே 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இச்சூழலில், சாதி வாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில சமூக அமைப்புகள் சார்பாகவும் தனிநபர்கள் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டு கொண்டது. அதேபோல, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிதாலும், பின்னர், அதற்கு அனுமதி வழங்கியது.


இதை தொடர்ந்து, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, கடந்த 6ஆம் தேதி முடிக்கப்பட்டு, இது தொடர்பான தரவுகள் மாநில அரசின் இணையதளத்தில் 12ஆம் தேதி பதிவேற்றப்பட்டது.


உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு பதில்:


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 7 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "மத்திய அரசை தவிர வேறு எந்த அமைப்பாலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது" என குறிப்பிட்டுள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948இன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு வாதிட்டுள்ளது.


"இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின் விதிகளின்படி, எஸ்.சி/எஸ்.டி/எஸ்.இ.பி.சி மற்றும் ஓபிசி சமூக மக்களின் மேம்பாட்டிற்கான அனைத்து உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது" என பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிகாரை பொறுத்தவரை அங்கு சாதி மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. மற்ற மாநில அரசியலில் சாதி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை காட்டிலும் பிகாரில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.


ஒவ்வொரு நகர்வும் சாதியை சார்ந்தே இருக்கும். அங்கு, சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சாதிய குழுக்கள், ஆளும் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே ஆதரித்து வருகின்றன.


சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சாதிய குழுக்களுக்காக கொண்டு வரப்படும் சமூக நல திட்டங்களை அமல்படுத்த இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவும்.