Onion Export : இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.





இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், "வங்காளதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் 31 ஆம் தேதி வரை தனியார் வர்த்தகம் மூலம் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் என்றும்,  அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி  செய்ய பல நாடுகளில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,  வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கையின்  அடிப்படையில் வெங்காய ஏற்றுமதி அளவை மதிப்பிட்டு, அமைச்சர்கள் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​மார்ச் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் டிசம்பர் 8, 2023 அன்று வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், மார்ச் 31 ஆம் தேதிக்கு பின்னரும் தடை தொடரும் என கூறப்படுகிறது. மேலும், மகராஷ்டிராவில் குறைவான நிலப்பரப்பில்தான் பயிர் வைக்கப்பட்டுள்ளது. எனவே வெங்காய ஏற்றுமதிக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2023 ஆம ஆண்டு குளிர்கால பருவத்தில், வெங்காய உற்பத்தி 22.7 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. பொதுவாக, குளிர்காலத்தில் விலையும் வெங்காயத்தை பின்வரும் பருவ காலத்தில் பயன்படுத்த சேமிக்கப்படும். இன்னும் சில நாட்களில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் எந்த அளவு வெங்காய விளைச்சல் இருந்தது என்பது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.