கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.


மணிப்பூரில் என்னதான் நடக்கிறது?


மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாள்களில் வன்முறை சம்பவங்கள் ஒப்பிட்டளவில் குறைந்து காணப்பட்டாலும் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விஷ்ணுபூர் - சுராசந்த்பூர் எல்லைபகுதிகளில் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வரும் வன்முறையில் 16 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.


ஒரே நாளில் மாறிய நிலைமை:


இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் கூடுதலாக 900 பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு அங்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை காவல் படை, சசாஸ்திர சீமா பால் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளை சேர்ந்த 900 வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. இவர்கள் சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்தடைந்தனர். மணிப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்" என்றார்.


கடந்த மே 3ஆம் தேதி, இனக்கலவரம் வெடித்ததில் இருந்து, ராணுவம், துணை ராணுவ படையான அசாம் ரைபிள்ஸ் மற்றும் பல்வேறு மத்திய ஆயுத காவல் படைகளை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட வீரர்களை பாதுகாப்பு அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.


ஒரு தலைபட்சமா?


ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கலவரத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான குக்கி பழங்குடி சமூகத்தினர், மாநில காவல்துறையினர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதே சமயத்தில், மத்திய படைகளில் சில பிரிவினர் குக்கி பழங்குடி சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக மெய்தெய் சமூக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


அதேபோல, பாதுகாப்பு படைகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் சில பெண்கள் அமைப்புகள் இடையூறு விளைவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மத்திய ஆயுத காவல் படையினர், மாநில காவல்துறையினர் விரைவாக செயல்படுவதை தடுக்க சாலையில் தடுப்புகளை போடுவதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.


மணிப்பூர் முழுவதும் இருந்து இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட 1,195 ஆயுதங்கள் மற்றும் 14,322 பல்வேறு வகையான வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.