தொழிலாளர் நலன்களை காக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக 4 தொழிலாளர் சட்ட விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் தொடங்கி ஐடி துறை வரை பல வகையாக பிரிவுகள் இயங்கி வருகின்றது. கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவுக்கு என பொதுவான தொழிலாளர் நல சட்டங்கள் இருந்தாலும், மாநில அரசும் தங்கள் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான விதிகளை கொண்டிருக்கிறது. வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிதாக வந்த 4 சட்டங்கள்
இந்த நிலையில் பல்வேறு துறை சார்ந்து வேலை செய்யும் பணியாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு 4 சட்ட விதிகளை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி 2019 தொழிலாளர் ஊதியச் சட்டம், 2020 தொழில்துறை தொடர்புகள், 2020 சமூக பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொழில்முறை பாதுகாப்பு, சுகாதாரம், 2020 பணியிடச் சூழல் சட்டம் ஆகியவை அந்த சட்ட தொகுப்புகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமலில் இருக்கும் தொழிலாளர் நல சட்டங்கள் நம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இயற்றப்பட்டவையாகும். அதனை தற்போதைய காலத்தில் செயல்படுத்துவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல்கள் உள்ளது. அதனை காலத்திற்கேற்ப மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் அமலில் இருந்த 29 தொழிலாளர் நல சட்டங்களை 4 பிரிவுகளின் கீழ் ஒருங்கிணைத்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களுக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் சம மரியாதை கிடைக்கும்.
ஒரு வருட வேலைக்குப் பிறகு நிலையான கால ஊழியர்களுக்கு பணிக்கொடை கிடைக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருடாந்திர இலவச சுகாதாரப் பரிசோதனை செய்யலாம். கூடுதல் நேரம் வேலை பார்த்தால் இரட்டை ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அபாயகரமான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு உண்டாகும். இந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஒரு சுயசார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும், மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ள்ளார்.