இன்புளூயென்சா தொற்று இந்தியாவில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


நோய் பாதிப்பு என்பது ஒவ்வொரு சீசன்களுக்கு ஏற்ப வேறுபடும் என்றாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பின்னால் ஏற்படும் ஒவ்வொரு தொற்றும் மத்திய, மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக  இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவும் காய்ச்சலால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


 6 நாட்கள் வரை  நீடிக்கும் இந்த காய்ச்சல் சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது. இது வயது வித்தியாசம்  இல்லாமல் அனைவரையும்  பாதிக்கிறது. மேலும் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் என்றும், இது நுரையீரலை பாதிக்கக்கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


சென்னையில்  அதிகளவில் இன்ஃப்ளூயன்ஸா வகை தொற்று பரவி வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றனர். தொற்று இருந்தவர்களுக்கு சிகிச்சைக்கான வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டது. 


இந்நிலையில் இன்ஃப்ளூயன்ஸா தொற்றால்  கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் வழக்குகளை உன்னிப்பாக கவனித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி,  கைகைளை அடிக்கடி கை கழுவ வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவதோடு மட்டுமல்லாமல் அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தும்மல், இருமல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும் என்றும், குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.