கேரள மாநிலம் திருவில்வமலையில் செல்போன் வெடித்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்தார். 


3-ஆம்  வகுப்பு மாணவி ஆதித்யஸ்ரீ நேற்று இரவு 10 மணியளவில் மொபைல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக போன் திடீரென வெடித்துள்ளது.  இதில்  சிறுமியின் முகம் சிதைந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவன், மொபைல் போன் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்யும் போது யுனிவர்செல் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்துள்ளான். ஒரு மணி நேரம் கழித்து பேட்டரி சார்ஜ் ஆகி விட்டதாக என தெரிந்து கொள்ள தனது நாக்கை பேட்டரியில் வைத்து பார்த்துள்ளான். அப்போது பேட்டரி வெடித்ததில் சிறுவன் முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தான். 


தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்படுத்தாத மனிதரை கண்டால் அது அதிசயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் கூட பெற்றோரிடம் உள்ள செல்போன்களை கொண்டு விளையாடுவதில்தான் ஆர்வம் செலுத்துகின்றன. இந்நிலையில் செல்போன் விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 


செல்போன்களில் வெடிக்கக்கூடிய ஒரே சாதனம் பேட்டரிதான். அது வெடிக்கும்போதுதான் செல்போன் மொத்தமாக வெடித்து சிதறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? உங்கள் அந்த செல்போனுக்காக கொடுக்கப்பட்ட சார்ஜரைக் கொண்டு ஜார்ச் செய்யாமல், பிறரின் செல்போன் சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் செய்வதும் பேட்டரி வெடிப்பதற்கு முக்கியக் காரணம்.  அது எப்படி எல்லாமே ஒரே பின் கொண்ட சார்ஜர்தானே என நினைக்கலாம். ஆனால் பேட்டரியின் திறன் அனைத்து போன்களிலும் ஒன்று இல்லையே. ஒவ்வொரு போனிலும் பேட்டரி திறன் மாறுபடுகின்றன. 


அந்தத் திறனுக்கு ஏற்றவாறு வோல்ட் மதிப்பு கொண்ட சார்ஜ்களே, போனுடன் வழங்கப்படுகின்றன. அதற்கான ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது, பேட்டரியின் வெப்பநிலையில் தாக்கம் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு, அதிக வோல்ட் கொண்ட சார்ஜரை பயன்படுத்து போது அந்த பேட்டரி பருமன் அடைகிறது. அதன் திறனில் நிலையற்ற தன்மை ஏற்படுவதுடன்,  உங்கள் போனில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்காத நிலையும் ஏற்படலாம். இதனால் நீங்கள் நீண்ட நேரம் சார்ஜ் போட்டு வைத்திருப்பீர்கள். பின்னர் இந்த நிலையற்ற தன்மையால் ஒரு நாள் உங்கள் போன் எந்நேரத்திலும் வெடித்து சிதற வாய்ப்புள்ளது. எனவே நம்முடைய செல்போனுக்கு உறிய  சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரிகள் வெடிப்பதை தவிர்க்க முடியும்.


பெரும்பாலான செல்போன்கள் சார்ஜ் போட்டு பேசும் போது தான் வெடிப்பதாக நாம் கேள்வி பட்டிருப்போம். அது ஏன் தெரியுமா? சார்ஜ் போட்ட நிலையில் செல்போனில் பேசுவதால், உங்கள் செல்போனிற்கு அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால் பேட்டரியின் வெப்பநிலை உயர்ந்து  திடீரென்று வெடித்து சிதறுகிறது.