நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, தொலைத்தொடர்பு சாதனங்கள், சிசிடிவி அமைப்புகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது, முக்கியத்துவம் வாய்ந்த நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பதையும், வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிசிடிவி மீதான பாதுகாப்பு அதிகரிப்பு:
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியின்படி , பொது மற்றும் அரசு வளாகங்களில் பயன்படுத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை குறித்து சில காலமாக கவலை அதிகரித்து வருகிறது. இவற்றில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கலாம் என்றும், அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் நம்பப்படுகிறது.சமீபத்தில், பாதுகாப்பு அமைப்புகள் அண்டை நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்ட ஒரு உளவு வலையமைப்பைக் கண்டுபிடித்துள்ளன. இது, கண்காணிப்பு அமைப்புகள் பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில் அவை தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
புதிய விதிகள் சொல்வது என்ன?
மத்திய அரசு போது சிசிடிவி கருவிகளுக்கான கட்டாய தொழில்நுட்பத் தரநிலைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி, நிறுவனங்கள் தங்கள் கருவிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய வன்பொருள் பாகங்களின் மூலத்தை வெளியிட வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத நபர்கள் கணினி அமைப்பைத் தொலைவிலிருந்து அணுகுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு பாதுகாப்பு குறைபாடுகளும் இந்தக் கருவிகளில் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக அவை சோதிக்கப்படும். இதுவரை நூற்றுக்கணக்கான சிசிடிவி மாதிரிகள் இந்தத் தரநிலைகளின் கீழ் சான்றளிக்கப்பட்டுள்ளன.
அரசு துறைகளுக்கான அறிவுறுத்தல்கள்:
புதிய விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய சிசிடிவி அமைப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறு அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழைய அமைப்புகளின் பாதுகாப்பைப் புதுப்பித்து மறுஆய்வு செய்யுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி மட்டுமல்லாமல் தொலைத்தொடர்பு வலையமைப்புகளையும் பாதுகாப்பதற்காக புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி தொலைத்தொடர்பு சாதனங்களை நம்பகமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க முடியும். இது வலையமைப்பிற்குள் எந்தவொரு ஊடுருவலையும் தடுக்க உதவும்.
தரவுகளுக்கான முக்கியத்துவம்:
டிஜிட்டல் யுகத்தில் தரவு மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதையும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக, அரசாங்கம் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும், மக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் தவறாகப் பயன்படுத்தவும் கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. அதன் விளைவாக, இந்தியா தற்போது தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் திசையில் வேகமாக நகர்ந்து வருகிறது.
