பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இல்லாத சூழலில் அவை சர்ச்சைக்குள்ளாவது வழக்கம். அந்த வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) செவ்வாயன்று தனது ட்விட்டரில் தனது பாடத்திட்டம் குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. 6 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில், வர்ண முறையைப் பற்றி பேசும் பகுதி அதன் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இது பள்ளிப்பாடத்திட்டத்தில் சாதிய அடுக்குமுறை கற்பிக்கப்படுகிறது என்கிற வகையில் சமூக ஊடகங்களில் வைரலானது
இதற்கு விளக்கம் அளித்துள்ள வாரியம், “வர்ணங்கள் பற்றிய தலைப்புகளைக் கொண்ட 6 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகம் CBSE-ஆல் வெளியிடப்பட்டதாக தவறாகக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையல்ல, இப்படிக்கு வாரியக் குழு” என வாரியத்தின் ட்வீட் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னரே தமிழகத்தின் முக்கிய இரண்டு அரசியல் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும் நெட்டிசன்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
தேர்வு மற்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வடிவமைக்கும் வாரியமாக செயல்படும் சிபிஎஸ்இ, நாடு முழுவதும் பாடப்புத்தகங்களை வெளியிடுவதில்லை. வாசகத்தின் வைரலான படத்தைக் கொண்ட இந்தப் புத்தகம், சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் பதிப்பகமான XSEED கல்வியால் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக பயனர்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சாதிய வர்ண அமைப்பு பற்றிய அத்தியாயத்தின் பக்கத்தைப் பகிர்ந்துள்ளனர், அது வைரலானது. பாடத்தின் உரையின்படின் வர்ணாசிரம முறையின் கீழ், பார்ப்பனர்கள் கோயில்களில் பூசாரிகள் மற்றும் கல்வி கற்பிப்பவர்கள் என்றும் , க்ஷத்திரியர்கள் போர்வீரர்கள், வைசியர்கள் வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் என்றும்,சூத்திரர்கள் மற்ற மூன்று வர்ணங்களுக்கு உதவும் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, இது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கியது.