CBSE Controversy Question: சிபிஎஸ்இ தேர்வில் பிற்போக்கான மற்றும் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வியை இடம்பெற்றது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.

  


இன்று மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி," சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றுள்ள மிகவும் பிற்போக்குத்தனமான  கருத்துக்கள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல் விரும்புகிறேன். பெண்கள் வலுப்பெறுவதினால் தான் சமூக-குடும்ப அமைப்புகள்  எண்ணற்ற சவால்களை சந்தித்திக்கின்றன. குழந்தைகள் மற்றும்  வேலைக்காரர்களின் கீழ்ப்படியாமைக்கு பெண் விடுதலை காரணமாக அமைந்தது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.   






மேலும், ஒட்டுமொத்த பத்தியிலும் இத்தகைய வெறுப்பை உமிழும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் சார்பாக எனது குரலை இங்கு பதிவிடுகிறேன். கல்வி மற்றும் திறன் மதிப்பீட்டில் கொண்ட தவறான புரிதலை இது பிரதிபலிக்கிறது. ஒரு முற்போக்கான சமூகத்தில் இத்தகைய வாதங்களுக்கு முற்றிலும் இடமில்லை. எனவே, வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மேலும், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்த சிறப்பு வகுப்புகள் தொடங்க வேண்டும்" என்று பேசினார். 






இதற்கிடையே, 10-ஆம் வகுப்பில் இடம் பெற்றிருந்த அந்த சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.