கால்நடை தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது.


ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ கோரிக்கை


1995-1996-ம் ஆண்டு டொராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.139.35 கோடியை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்தது. இதில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் ஏப்ரல் 2022-ஆம் ஆண்டில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் தரப்பட்டது. லாலு யாதவ்வின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியதைத் தொடர்ந்து, அதற்கான மனுவை ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 



கால்நடை தீவன ஊழல்


கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்குகள் தும்கா, தியோகர், சாய்பாசா மற்றும் டோராண்டா கருவூலங்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் எடுத்தது தொடர்பானதாகும். கடந்த ஆண்டு, டோராண்டா கருவூல வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உடல் நலக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கியது. 


தொடர்புடைய செய்திகள்: Youth Turned As Girl: நண்பனை திருமணம் செய்துகொள்ள பெண்ணாக மாறிய இளைஞர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!


நீதிபதிகள் குழு


தற்போது முதல் மூன்று வழக்குகளில் பாதி தண்டனையை அனுபவித்து விட்டதால் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஆனால் அந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்குமாறு கோரியுள்ளனர்.



சமீபத்தில் ED ரெய்டு


சமீபத்தில், அமலாக்க இயக்குனரகம் (ED) லாலுவின் குடும்பத்துடன் தொடர்புடைய ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நில மோசடியில் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் அவர்களது குழந்தைகள், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் நிலத்தை வாங்கிக்கொண்டு, மக்களுக்கு வேலை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூரில் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் 2004 மற்றும் 2009-க்கு இடையில் குரூப்-டி பதவிகளில் சில நபர்கள் நிலத்தை கொடுத்து வேலை வாங்கியதாக FIR-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.