கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாக இருப்பது பெங்களூர். நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூருவில் இருந்து அந்த மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள மைசூருக்கு பயணிப்பதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும்.


இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அதாவது, பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு  புதிய விரைவுச்சாலை அமைக்கப்பட்டது. ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை கடந்த மார்ச் 12ஆம் தேதி, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


திறக்கப்பட்ட ஆறே நாள்களில் தேங்கிய தண்ணீர்:


இந்த புதிய தேசிய விரைவுச்சாலையால் பெங்களூர் – மைசூர் இடையே பயணிப்பதற்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேசிய விரைவுச்சாலை திறக்கப்பட்ட ஆறே நாள்களில், ராமநகரா பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது.


பெங்களூருவின் அண்டை மாவட்டமான ராமநகர் அருகே தண்ணீர் தேங்கியது. நெடுஞ்சாலையில் உள்ள கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது.


இதனால், நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் வரலாறு காணாத மழை பெய்தபோது இதே கீழ்ப்பாலம்தான் வெள்ளத்தில் மூழ்கியது.


வாகன ஓட்டிகள் அவதி:


வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதால் கோபம் அடைந்த பயணிகள், கர்நாடக முதலமைச்சர் பொம்மை, பிரதமர் மோடி ஆகியோரை கடுமையாக சாடினர். இதுகுறித்து விகாஷ் என்ற பயணி கூறுகையில், "எனது மாருதி ஸ்விஃப்ட் கார், தண்ணீர் தேங்கிய  கீழ்ப்பாலத்தில் பாதியளவுக்கு மூழ்கியது. எனவே, கார் ஆஃப் ஆகிவிட்டது.


பின்னால் வந்த லாரி ஒன்று என் கார் மீது மோதியது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எனது காரை சரி செய்து தருமாறு முதலமைச்சர் பொம்மையிடம் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி இந்த நெடுஞ்சாலையை திறந்து வைத்தார்.


அந்த சாலை திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளதா என்று தனது சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்துடன் கூட சோதித்தாரா? ஓட்டு வங்கி அரசியலுக்காக கஷ்டப்பட வேண்டுமா? அவர்கள் பெரும் டோல் கட்டணம் கேட்கிறார்கள், என்ன பயன்?" என கேள்வி எழுப்பினார்.


இதுகுறித்து மற்றொரு பயணி நாகராஜு கூறுகையில், "கீழ்ப்பாலத்தில் தண்ணீர் நிரம்பிய சிறிது நேரத்திலேயே, பல விபத்துகள் நடந்தன. முதலில் என்னுடைய காரே விபத்தில் சிக்கியது. அதன் பிறகு ஏழெட்டு வாகனங்கள் தொடர் விபத்தில் சிக்கின. தண்ணீர் வடிய இடமில்லை.


பிரதமர் வருவார் என்ற செய்தி கிடைத்திருந்தால், 10 நிமிடத்தில்  தேங்கிய நீரை அப்புறப்படுத்தி இருப்பார்கள். நாங்கள் சாமானியர்கள் கஷ்டப்படுவதை உங்களால் பார்க்க முடியவில்லையா? இதற்கு யார் பொறுப்பு" என்றார்.