தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விடுவதை கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் பெங்களூருவில் நாளை அதாவது செப்டம்பர் 26-ம் தேதி பந்த் நடத்த அதாவது முழு அடைப்பு போராட்டம் அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த போராட்டத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் பெரும்பான்மையான அமைப்பு மற்றும் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


லாரிகள், பேருந்துகள் சேவை நிறுத்தம்:


இதனால் இன்று அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படவுள்ளன. அதாவது மாலை 6 மணி முதல் பெங்களூருக்குச் செல்லும் பேருந்துகளும் இரவு 8 மணி முதல் லாரிகளும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குருபுரு சாந்தகுமார் ஊடகங்களிடம், ”கன்னட சார்பு மற்றும் பிற கலாச்சார அமைப்புகளின் கூட்டத்திற்குப் பிறகு, செப்டம்பர் 23-ம் தேதி, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 


பேரணி:


செவ்வாய்க்கிழமையன்று பெங்களூருவின் டவுன்ஹாலில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.  தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஐடி பிடி நிறுவனங்கள் மற்றும் திரைப்படத் துறையினர் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும். 


கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவதை உடனடியாக நிறுத்தவும், குடிநீர் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினை” எனக் கூறினார். 


பா.ஜ.க. முழு ஆதரவு:


காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட மறுத்துவிட்டது. இதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த வியாழக்கிழமை முதல் அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி முதல்  பெங்களூரு  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 


இந்த பந்திற்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவும் ஆதரவளிக்கிறது. மேலும், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு, கர்நாடக பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.