பீகாரில் பெற்ற கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு பட்டியலினப் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவத்தில், தொடர்புடைய நபர்களை கைது செய்ய மகளிர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
பட்டியலின பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த மோசிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் தான், இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்த 30 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1,400 கடனாக வட்டிக்கு பெற்றுள்ளார். அதனை வட்டியுடன் சேர்த்து கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும் என பிரமோத் சிங் மிரட்டி வந்துள்ளார். ஆனால், தன்னால் கூடுதல் பணம் கொடுக்க முடியாது என அந்த பெண் கூறியுள்ளார்.
பட்டியலினப் பெண் மீது தாக்குதல்:
இந்நிலையில், கடன் பெற்ற அந்த பெண்ணை, பிரமோத் சிங், அவரது மகன் அன்ஷு குமார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நான்கு பேர் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, பெண்ணின் ஆடைகளை கழற்றி எரிந்த கும்பல், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு மட்டுமின்றி, அந்த பெண்ணின் வாயில் சிறுநீரும் கழித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்டது ஏன்?
இதுதொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் சோக் தாஸ், ”நான்கு நாட்களுக்கு முன்பு பிரமோத் மற்றும் அவரது கூட்டாளிகள் வட்டித் தொகை நிலுவையில் இருப்பதாக தங்களை அணுகினர். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இது பிரமோதை மேலும் கோபப்படுத்தியது. இதனால், சனிக்கிழமை இரவு பிரமோத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். நாங்கள் அவளைத் தேடி வெளியே சென்றோம. உடலில் ஆடை இன்றி வீட்டை நோக்கி அவள் ஓடி வந்தாள். பின்பு துணிகளால் அவளை போர்த்தி வீட்டிற்கு அழைத்து வந்தோம். அவளின் ஆடைகள் கழற்றப்பட்டதாகவும், பிரமோத்தின் மகன் தனது வாயில் சிறுநீர் கழித்ததாகவும் எங்களிடம் கூறினார். அவள் தலையில் காயம் இருந்தது. தொடைகளில் அடித்ததற்கான அடையாளங்களும் இருந்தன. பெண்ணை தாக்கியவர்கள் கிராமத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் பயத்தில் இருக்கிறோம், சில நாட்களுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேற நினைக்கிறோம்" என தெரிவித்தார்.
வழக்குப்பதிவு:
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மகளிர் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பேசிய பாட்னா எஸ்.எஸ்.பி ராஜீவ் குமார் மிஸ்ரா, குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, தலைமறைவாக உள்ள அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என கூறினார்.