மத்தியப்பிரதேசத்தில் அக்னிவீர் தேர்வுக்கு தயாரானவர் போலி என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தின் கடாரா கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஆகாஷ் குர்ஜார்.
இவர் பிளஸ் 2 பாஸ் செய்துள்ளார். அக்னிவீர் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் உ.பி. போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் போலி என்கவுன்ட்டர் மூலமாக தனது மகனை சுட்டு வீழ்த்தியதாக அந்த இளைஞரின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இளைஞர் ஆகாஷ் குர்ஜாரின் தாயார் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "என் மகனை உத்தரப்பிரதேச போலீஸார் கடத்தி சென்றனர். அவர்கள் போலி என்கவுன்ட்டரில் என் மகனை கொலை செய்துள்ளனர். உண்மையில் எனது மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர்களாகவே என் மகனை சட்டவிரோத மணல் கடத்தல் குற்றச்சாட்டில் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டு ஆக்ரா சுங்கச்சாவடி வழியாக சென்ற 13 மணல் கடத்தல் லாரிகளில் ஒன்றில் ஆகாஷ் குர்ஜாரும் இருந்ததாக போலீஸார் ஜோடித்துள்ளனர்" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் உத்தரப்பிரதேச ஜூடிசியல் மாஜிஸ்திரேத் நீதிமன்றம் இந்த போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகாஷ் குர்ஜார் அவர் வீட்டில் மூத்த மகன். அவருக்குப் பின் இரண்டு பேர் உள்ளனர். இவர் அக்னிவீர் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆகாஷ் குர்ஜார் தன் தாயிடம் கடைசியாக பேசும்போது மஃப்டியில் வந்த சில போலீஸார் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் தனக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை, பயமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தான் பேருந்தில் இருந்து இறங்கி கழிவறை சென்றபோது தன்னை போலீஸார் கைது செய்ததாகக் கூறியுள்ளார். இதையும் வீடியோவில் சுட்டிக்காட்டிய ஆகாஷ் குர்ஜாரின் தாயார் எந்த பாவமும் அறியாது தனது அப்பாவி மகனை உத்தரப் பிரதேச போலீஸார் படுகொலை செய்ததாகக் கூறியுள்ளார்.
தன் மகனைக் கடத்திய போலீஸார் அவரின் இரண்டு தொடைகளிலும் துப்பாக்கியால் சுட்டதோடு அதன்பின்னர் அவரது வயிற்றில் சுட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து ஆகாஷ் குர்ஜாரின் வழக்கறிஞர் கூறுகையில், "இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. தேசிய மனித உரிமைகள் கமிஷனின் வரையறைகள் திட்டவட்டமாக மீறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது எவ்வித எஃப்ஐஆரும் பதிவாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆகாஷ் குறைந்த தூரத்திலேயே கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் அமர்ந்திருக்கும் போது அவரை சுட்டுள்ளதாகவும் சந்தேகம் உள்ளது” என்றார். ஆகாஷ் மீது கடந்த செப்டம்பர் மாதம் துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர் கடந்த நவம்பர் மாதம் இறந்தார். 48 நாட்கள் உயிருக்குப் போராடி அவர் இறந்தார். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.