பாபா ராம்தேவ் மீது தேச துரோக வழக்கு; இந்திய மருத்துவ கழகம் கடிதம்

பாபா ராம்தேவ் மீது தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுங்கள் என பிரதமருக்கு இந்திய மருத்துவக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Continues below advertisement
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது இந்திய மருத்துவக் கழகம் புகார்க் கடிதம் அனுப்பியுள்ளது. அவர் மீது தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
 

அக்கடிதததின் விவரம் வருமாறு:
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாங்கள் காட்டிவரும் முனைப்பின் வழியில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு கொரோனாவுக்கு எதிரான ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. அரசாங்கத்தின் முயற்சியால் இதுவரை 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே குறுகிய காலத்தில் இத்தனை பெரிய அளவில் தடுப்பூசி செலுத்திய சாதனை நம்முடியது. இந்த வேளையில் தடுப்பூசி தயாரிப்புக்கு தாங்கள் அளித்த ஊக்கத்தையும், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற நீங்கள் காட்டும் முனைப்பையும் நாங்கள் மதிக்கிறோம்.
நாட்டில் இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களில் வெறும்  0.06% பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிலும் வெகுக் குறைவானவர்களுக்கே தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
எனவே, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்பது உறுதியாகிவிட்டது. தடுப்பூசியால் நாம் நம் மக்களைப் பாதுகாக்கிறோம். இதுதொடர்பாக எதிர்வரும் மன் கி பாத் நிகழ்ச்சியில் தாங்கள் மக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படியான சூழலில் நாங்கள் மிகுந்த வேதனையுடன் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் அவதூறு வீடியோ பற்றி தெரிவிக்கிறோம். அவர் அந்த வீடியோவில் இதுவரை நாடுமுழுவது 10,000 மருத்துவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாகவும் அவதூறு பரப்பியிருக்கிறார்.
ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே நவீன அலோபதி சிகிச்சைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும்போது இந்த சிகிச்சை முறையை குறை கூறுபவர்கள் மத்திய அரசைக் கேள்வி கேட்கிறார்கள் என்றே அர்த்தம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவ முன்களப் பணியாளர்கள் செயல்படுகின்றோம்.
கொரோனா முதல் அலையில் 513 மருத்துவர்களும், இரண்டாவது அலையில் இதுவரை 753 மருத்துவர்களும் இறந்துள்ளனர். இப்போதும் கூட நாடு முழுவதும் 10 லட்சம் மருத்துவர்கள் மருத்துவப் பணிகளை செய்து வருகின்றனர்.

இனி எதிர்வரும் காலத்திலும் அரசாங்கத்துடன் கைகோர்த்து கொரோனாவை எதிர்கொள்ளும் என உறுதியளிக்கிறோம். ஆனால், ஒருசில நபர்கள் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பும்போது அதை அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என வேண்டுகிறோம். பாபா ராம்தேவ் மீது தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாபா ராம்தேவ் தனது சர்ச்சைக் கருத்தைத் திரும்பப் பெறுவதாகக் கூறியதோடு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கும் விளக்கக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
Sponsored Links by Taboola