Sabarimala Aravana Payasam: அரவணை பாயாசத்தில் ஏலக்காய் சேர்ப்பது, பக்தர்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என கேரள உயர்நிதிமன்றம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அறிவிப்பு:
திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் இனி ஏலக்காய் சேர்க்கப்படாது. அந்த பாணியில் கடந்த ஓராண்டாக தயாரிக்கப்பட்ட அரவணை பாயாசம் குறித்து எந்த புகாரும் வரவில்லை. இதன் காரணமாக அரவணை பாயசத்தில் இனி ஏலக்காய் சேகரிக்கப்படாது. அத்துடன் சீரகத்திலும், கிருமிநாசினி உள்ளதாக சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் தேவைப்பட்டால் சீரகமும் அரவணை பாயசத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
அரவணை பாயாச பிரச்னை:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அரவண பாயாசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றிற்கு 200 பேட்ச் பாயாசம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், அரிசி, சர்க்கரை, பழம், நெய் ஆகியவை அதிகளவில் சேர்ப்பதோடு, ஏலக்காய் மற்றும் சீரகம் போன்ற பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. சபரிமலை பக்தர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், தான் பாயாசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றதாக இருப்பதோடு, அதில் பூச்சிக் கொல்லிகள் இருப்பதால் ஆபத்து ஏற்படும் என்றும் புகார்கள் எழுந்தன.
ஆய்வு முடிவுகள்:
புகார்களை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாயாசத்திற்கு பயன்படுத்தப்படும் ஏலக்காயை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. அதுதொடர்பான அறிக்கையின்படி, அந்த ஏலக்காய் மாதிரியில் 14 கொடிய பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏலக்காயில் சில பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகவும், அவை கடுமையான நோய்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் வந்தவுடன், பூச்சிக்கொல்லி கலந்த விதைகள் அடங்கிய பாயாசத்தை விநியோகிக்கக் கூடாது என்று தேவஸ்தான வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவு:
இதுதொடர்பாக வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை பாயாசத்தை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கூறியதோடு, அதற்கு காரணமாக அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை சுட்டிக்காட்டி கடந்த ஜனவரி 12-ந் தேதி எச்சரித்தது. அத்துடன் அதனை பயன்படுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவை உண்ணத்தக்கவை என்று மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அரவணை பாயாசத்தில் ஏலாக்காயை தவிர்த்து வந்த தேவசம் போர்ட், இனி ஏலக்காயை பயன்படுத்தவே போவதில்லை என அறிவித்துள்ளது.