ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்றதை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை! 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது. வரும் 10 ஆம் தேதி நமது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கும், எங்கள் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.






 மேலும் கபடி போட்டியில் மகளிர் தங்கம் வென்றதை ஒட்டி அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று தருணம். தங்கம் வென்றது நமது கபடி மகளிர் அணி! இந்த வெற்றி, நமது விளையாட்டு வீராங்கனைகளின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு சான்றாகும். இந்த வெற்றியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அணிக்கு வாழ்த்துக்கள். தங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.  






ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் காம்பவுண்ட் தனிநபர் ஆடவர் பிரிவில்,  இந்திய வீரர்கள் ஓஜாஸ் பிரவின் மற்றும் அபிஷேக் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் இருவரும் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 149-க்கு 147 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ஓஜாஸ் பிரவீன் தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கனவே மகளிர் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்ற நிலையில், தற்போது ஓஜாஅசும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 


ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். நேற்றைய நாளின் முடிவில் 95 பதக்கங்களை இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என தற்போது வரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம், இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.