கர்நாடாக சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சி தரப்பிலும் ஆட்சியை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். இதனால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்றுடன் கர்நாடகா மாநில தேர்தலுக்கான பிராச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நட்சத்திர பேச்சாளர்களும் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை பிரச்சாரம் நிறைவு பெரும் நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். நாளை வேட்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பிரச்சாரம் நிறைவுபெற்று மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.