5ஜி சேவைகளை வழங்கும் அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு அதிவேக இணைய சேவை கிடைக்கவுள்ளது. 5ஜி நெட்வொர்க்கை அமைக்க பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்க அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் ஏலம் ஜூலை இறுதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 26ஆம் தேதி, அலைக்கற்றை ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்த ரிசர்வ் விலையில் 5ஜி ஏலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மொபைல் சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றையின் குறைந்தபட்ச விலையில் 39 சதவிகிதம் குறைக்க டிராய் பரிந்துரை செய்திருந்தது. பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்பது அலைவரிசைகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட ஏல அழைப்பு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய பொது நெட்வொர்க்கிற்காக 5ஜி அலைக்கற்றை குத்தகைக்கு எடுக்க அனுமதிக்கப்படவுள்ளது. இதுகுறித்து ஏல அழைப்பு விண்ணப்பத்தில், "விலை, ஒதுக்கீட்டின் முறை குறித்த டிராயின் பரிந்துரைகள் ஆய்வு செய்த பிறகு, எவ்வளவு தேவை உள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படும் அலைக்கற்றை நேரடியாக ஒதுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்