ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்களுக்கு இணையான போனஸிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2021-2022 நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறனை மேம்படுத்தும் விதமான போனஸ் வழங்குவதற்கு அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.


இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 78 நாள்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தி திறன் சார்ந்த போனஸ், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்களை தவிர்த்து அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே அலுவலர்களுக்கு வழங்கப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது.






கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, சுமார் 11.27 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் இந்த முடிவால் பயனடைவார்கள். ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்குவதால் மத்திய அரசிற்கு 1,832.09 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.


உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படுவதற்கான ஊதிய உச்ச வரம்பு மாதத்திற்கு 7,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சம் 17,951 ரூபாய் வழங்கப்பட உள்ளது. 






ரயில்வே ஊழியர்கள் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளின் செயல்திறனில் முக்கிய பங்கு வகித்தனர். இது பொருளாதாரத்திற்கான ஊக்கியாகவும் செயல்படுகிறது என ரயில்வேதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பொது முடக்கத்தின்போது, உணவு, உரம், நிலக்கரி மற்றும் பிற பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை ரயில்வே ஊழியர்கள் உறுதி செய்தனர். முக்கிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதையும் ரயில்வே உறுதி செய்துள்ளது.