கொரோனாவுக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக இந்தியாவின் சுகாதாரச் சூழல் பல புதிய சவால்களை சந்தித்து வருகிறது.  ஏராளமான மக்கள் தொடர்ந்து இருமல், சளி மற்றும் காய்ச்சல் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றனர். அது குணமடையவும் வழக்கத்தை விட அதிக நாட்கள் ஆகின்றன. இந்த வைரஸ் நோய் பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் பாதிக்கிறது. இது போன்ற நிகழ்வு இதற்கு முன்னர் நிகழவில்லை என்றும், பொதுவாக 3-4 நாட்கள் நீடிக்கும் சாதாரண காய்ச்சலில் இருந்து மாறுபட்டு இது குணமடைய மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை எடுக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, வழக்கமான மருந்துகள் கூட இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இல்லை, மேலும் இதன் அறிகுறிகளைப் போக்க ஸ்டெராய்டுகள் தேவைப்படுகின்றன என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


இந்த நிலை பொதுமக்களிடையே கணிசமான கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இதனால் #MedTwitter என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி மக்கள் ஊடகங்களில் அதற்கான தீர்வைத் தேடி வருகின்றனர்.இதற்கான பொதுவான காரணம் என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில் பல அனுமானங்கள் கிளைத்துள்ளது.


சுற்றுச்சூழல் சீரழிவு


இந்தியாவின் சமீபத்திய தீவிர வானிலை ஏற்ற இறக்கங்கள் வைரஸ் அதிவேகமாகச் செயல்படப் பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் காற்றின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல சூழல் இதற்குக் காரணமாக நம்பப்படுகின்றன.  இந்த வகை வைரஸ்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதிப்பதாக நம்பப்படுகிறது. ஆயுர்வேத ஆலோசகர் டாக்டர் அம்ரின் தன்பூர்வாலா குறிப்பிடுகையில், “சுற்றுச்சூழலில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் மக்களை பாதிக்கின்றன. உதாரணமாக பொதுவாக வெப்பமான மாதமாகக் கருதப்படாத பிப்ரவரி இந்த மாதம் அதீத வெப்பத்துடன் இருந்தது.இந்த ஆண்டு இந்தியா 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான பிப்ரவரியைக் கண்டது. இத்தகைய எதிர்பாராத வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பெரிதும் பாதித்து, நாடு முழுவதும் வைரஸ் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பங்களித்துள்ளன” என்கிறார் அவர்.


வானிலை மாற்றத்துடன் கூடுதலாக, மோசமான காற்றின் தரமும் இந்த காய்ச்சலுக்கு பங்களிக்கிறது. "இடத்தைப் புதுப்பித்தல்(Renovation), கட்டுமானம் (Construction), சாலைப் பணிகள் மற்றும் பல கட்டுமானத் தளங்களின் காரணமாக, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது" என்று மற்றொரு நிபுணரும் கூறுகிறார். மும்பை டெல்லி போன்ற காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களைத் தவிர காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ள நகரங்களில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் இதுபோன்ற சுவாசத்தை பாதிக்கும் வைரஸ் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார் அந்த நிபுணர். 


வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பதற்கு சுற்றுச்சூழல் காரணிகள் மட்டுமே காரணம் அல்ல என்றாலும், அவை மனித உடலை பலவீனப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.