ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை முடியும் காலத்தில் அதன் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை காட்டி நிறைவு பெறும். அந்த வகையில் தற்போது தென்மேற்கு பருவ மழை மீண்டும் வலு பெற தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 4-5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்நிலையில் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேகமாக மரம் செடி கொடிகள் மற்றும் மண் உள்ளிட்டவை சரிந்து வந்து சாலையில் விழ தொடங்கியது. அந்த சமயத்தில் அப்பகுதி வழியாக பேருந்து ஒன்று 14 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து சம்பவ இடத்திற்கு வருவது சில நொடிகளுக்கு முன்பாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதை பார்த்தவுடன் பேருந்து ஓட்டுநர் பேருந்தை அதே இடத்தில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. 


 






அந்த நேரத்தில் பேருந்திலிருந்த பயணிகள் அச்சத்துடன் பேருந்து ஜன்னல் கண்ணாடிகள் வழியாகவும் குதித்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு பெரிய அச்ச உணர்வு ஏற்படுகிறது. அவர்கள் அனைவரும் நொடி பொழுதில் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 14 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.


கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 9 பேருக்கு மேல் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். அந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் ஒரு நிலச்சரிவு சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இம்முறை யாரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்தியாவில் தலிபான்களுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கருத்து... 14 பேர் கைது!