Assam bus collides with truck: அசாமின் டெர்கானில் அதிகாலை 5 மணியளவில் 45 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து,  டிரக் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 






45 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து டின்சுகியாவின் திலிங்க மந்திர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணத்திற்காக அதிகாலை 3 மணியளவில் புறப்பட்ட அந்த பேருந்து தனது இலக்கை அடையவிருந்தபோது, ​​மார்கெரிட்டாவிலிருந்து வந்த நிலக்கரி ஏற்றப்பட்ட டிரக் உடன் மோதியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மிட்டு ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 14 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளன. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நடந்தது என்ன?


கோலாகாட்டில் உள்ள கமர்கானில் இருந்து சுற்றுலா பயணமாக டின்சுகியா மாவட்டத்தில் உள்ள திலிங்க மந்திர் நோக்கிச் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்குள்ள நான்குவழி நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்ததால் தவறான பக்கத்தில் ஜோர்ஹாட் திசையில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. பேருந்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில்,  பனிமூட்டம் காரணமாக எதிரே வந்த வாகனத்தை சரியாக உணர முடியவில்லை என கூறமுடிகிறது. அதோடு,  இரண்டு வாகனங்களுமே அதிவேகமாக இருந்ததால் விபத்து மோசமானதாக அமைந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.