நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களை இணையத்தில் விற்பதற்காக உருவாக்கப்பட்ட Bulli Bai செயலி வழக்கில் பெங்களூரை சேர்ந்த 21 வயது இளைஞரை மும்பை காவல்துறை இன்று கைது செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவரின் பெயர் விஷால் குமார் எனவும், இந்த வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியை உத்தரகாண்ட்டில் கைது செய்திருப்பதாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன், இஸ்லாம் பெண்களை ஏலத்தில் விற்பதற்காக Sulli Deals என்ற பெயரில் ஓப்பன் சோர்ஸ் செயலி உருவாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'சுல்லி' என்பது இஸ்லாமிய பெண்களை மிகக் கண்ணிய குறைவாக அழைக்கும் இழிச்சொல்லாகும். சமூக வலைத் தளங்களில் தீவிர இந்துத்துவ ஆதரவாளர்கள் 'சுல்லி' என்ற சொல்லை பயன்படுத்திவந்தனர். இந்த 'சுல்லி டீல்ஸ்' சம்பவத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதிதாக ' Bulli bai' என்ற செயலி கிட் ஹப் தளத்தில் செயல்படத் தொடங்கியது. இதில், நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படங்கள் தவாறாக சித்தரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.
இந்நிலையில், Bulli Bai செயலி தொடர்பான வழக்கை மும்பை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மும்பை சைபர் குற்றங்கள் பிரிவினர் துரித விசாரணையை மேற்கொண்டு, சந்தேகத்தின் பேரில் பெங்களூர் இளைஞர் விஷால் குமாரை கைது செய்து விசாரித்து வருகிறது. 21 வயதான இவர், பொறியியல் பட்டதாரி என அறியப்படுகிறது. விஷால் குமாரும், முக்கிய குற்றவாளியான பெண் ஒருவரும் போலியான அக்கவுண்டுகளை தொடங்கி, அவற்றுக்கு சீக்கியர்களின் பெயர்களை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இவரது பெயர் ‘விஷால் குமார்’ என தெரிய வந்ததில் இருந்து, இந்த பெயரைச் சுற்றி புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பெயரை வைத்து, இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் விஷால் குமார் இல்லை விஷால் ஜா எனவும் கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது.
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், குற்றம் செய்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்