தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 










தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருத்துவர்கள் செய்து வரும் ஒப்பற்ற சேவைக்கு, 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். 






மருத்துவர்கள், கடவுளின் மறு உருவம். இந்த கொரோனா போரில், லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றி வருகின்றனர். தங்களின் உயிர்களை தியாகம் செய்து பிறரது உயிர்களை காத்து வருகின்றனர். நம் மருத்துவர்களின் சிறந்த செயல்பாடாலும், அவர்களது அனுபவத்தாலும் இந்த கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடிகிறது. சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் இல்லாத பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.50,000 கோடி கடன் உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.






பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவ துறையைச் சார்ந்த நிபுணர்கள் யோகாவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்து வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு பிறகு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க யோகாசனம் உதவியாக இருப்பது பற்றி உலகெங்கிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” ” என தெரிவித்துள்ளார்.