கடந்த 1984ஆம் ஆண்டு, கான்ஷி ராமால் தொடங்கப்பட்ட கட்சி பகுஜன் சமாஜ். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டது. உத்தர பிரதேச அரசியலில் செல்வாக்கு படைத்த கட்சிகளில் ஒன்றாக உள்ளது. உத்தர பிரதேசத்தை தவிர்த்து மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலும் ஒரு சில தொகுதிகளில் செல்வாக்கு படைத்த கட்சியாக உள்ளது.


பகுஜன் சமாஜ் கட்சி:


கான்ஷி ராம் உயிரோடு இருக்கும் போதே, மாயாவதியை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். மாயாவதியின் வழிகாட்டுதலில் கட்சி வேகமாக வளர்ந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி வகித்துள்ளார். இருப்பினும், கடந்த 2012ஆம் ஆண்டு, உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.


கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல், 2017ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து, பரம எதிரியாக கருதப்படும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தது.


அதிலும் தோல்வியே மிஞ்சியது. இதை தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தொடங்கியதில் இருந்து சந்தித்திராத மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. 


மாயாவதியின் அரசியல் வாரிசு யார்?


இந்த நிலையில், மாயாவதி, தனது அரசியல் வாரிசை அறிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தனது இளைய சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷை அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவர் இதுகுறித்து பேசுகையில், "வருங்காலத்தில் ஆகாஷ் ஆனந்தே, தனது அரசியல் வாரிசாக வருவார் என்று எங்கள் தலைவர் (மாயாவதி) 
கூறியுள்ளார். 


கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் அவருக்கு வழங்கியுள்ளார். உ.பி மற்றும் உத்தரக்கண்டில் கட்சியை தொடர்ந்து வழிநடத்துவேன் என மாயாவதி கூறியுள்ளார். ஆகாஷ் ஆனந்த், மற்ற மாநிலங்களில் கட்சியை வழிநடத்துவார் என்றும் அவர் கூறினார்.


ஆகாஷ் ஆனந்தின் வழிகாட்டுதலில்தான், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சி சந்தித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் ராஜஸ்தானில் 14 நாள் பாதை யாத்திரையை மேற்கொண்டார். கடந்தாண்டு முதல் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராக ஆகாஷ் ஆனந்த் செயல்பட்டு வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கைப்பற்றியிருந்தது. இந்த முறை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.