மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அளிக்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல சமயங்களில், இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இலவசங்களை விமர்சிக்கும் அதே நேரத்தில் பாஜக சார்பிலும் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.


மீண்டும் விவாதத்தை கிளப்பிய இலவசங்கள்:


சமீபத்தில், தெலங்கானா தேர்தலிலும் பாஜக சார்பில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கு நான்கு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாகவும், புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் பதிவு செய்வதன் மூலம் 21 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில், இலவசங்கள் குறித்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். மனித உரிமைகள் நாளை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "இலவசங்கள் என சொல்லப்படுபவையும் அதை வைத்து செய்யப்படும் அரசியலும் அரசின் செலவினங்களையும் முன்னுரிமைகளையும் சிதைக்கிறது. 


போட்டி போட்டு கொண்டு பைத்தியக்காரத்தனமாக இலவசங்கள் வழங்கப்படுகிறது. பொருளாதார ஜாம்பவான்களின் கூற்றுப்படி, இலவசங்கள், மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது" என்றார்.


"மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம்"


தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர், "தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஒரு விவாதத்தை ஊக்குவித்து, ஒரு கட்டுரையுடன் வெளிவருவதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அது மக்களுக்கு தகவல் தரும் வகையில் உள்ளது. மக்களுக்கு ஊக்கம் தரும் வகையில் உள்ளது. சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. 


மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம். மனித வளத்தையும் மனித மனங்களையும் பலப்படுத்துங்கள். ஆட்சி செய்பவர்களுக்கு அறிவூட்டலாம். மனித உரிமைகள் மற்றும் விழுமியங்கள் மலர்ந்ததன் காரணமாக நமது ‘அமிர்த காலம்’ ‘கௌரவ் காலம்’ ஆனது. சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதுதான் இந்தியாவின் புதிய விதி. முன்னுதாரணத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது" என்றார்.






நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா, "பயங்கரவாத செயல்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு  அனுதாபப்படுவது மனித உரிமைகளை அவமதிக்கும் செயல்" என்றார்.