கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அவரை தீவிரவாதி என குறிப்பிட்டு பேசினார்.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான டேனிஷ் அலி, நாடாளுமன்றத்தில் அனைவரின் முன்பும் அழுதார். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலிக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு குரல் கொடுத்தனர். ராகுல் காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், டேனிஷ் அலியை சந்தித்து ஆறுதல் கூறினர்.


மதவெறி வசை சொற்களுக்கு உள்ளான டேனிஷ் அலி:


கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாஜக எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. டேனிஷ் அலி மற்றும் ரமேஷ் பிதுரி ஆகிய இருவரையும் அழைத்து மக்களவை ஒழுங்கு குழு விசாரணை நடத்தியது. ஒழுங்கு கூழு கூட்டத்திலேயே தன்னுடைய பேச்சுக்கு ரமேஷ் பிதுரி வருத்தம் தெரிவித்தார். தன்னுடைய கட்சி எம்பிக்கு இப்படி நடந்திருந்தாலும், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் பகுஜன் சமாஜ் கட்சி அமைதி காத்து வந்தது.


இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டேனிஷ் அலி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் விதிகளுக்கு எதிராக செயல்படக் கூடாது, பேசக் கூடாது என பலமுறை எச்சரிக்கப்பட்டீர்கள். ஆனால், அதையும் மீறி தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள்.


நீங்கள் எப்போதும் கட்சியின் வழியில் நடப்பீர்கள் என்று தேவகவுடா அளித்த உத்தரவாதத்தின் பேரில் உங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதிக்கு பிறகுதான் உங்களுக்கு பிஎஸ்பி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டீர்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


நீதிக்கு துணை நின்ற காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கமா?


லஞ்சம் பெற்ற புகாரில் நாடாளுமன்றத்தில் இருந்து திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் டேனிஷ் அலி என்பது குறிப்பிடத்தக்கது.


மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் டேனிஷ் அலி. கடந்த 2019ஆம் ஆண்டு, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடாவின் ஒப்புதலோடு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த ஆறே நாட்களில் அம்ரோஹா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜகவின் கன்வர் சிங் தன்வரை கிட்டத்தட்ட 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.