சத்தீஸ்கர் மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத 4 வயது மாணவனுக்கு ஆசிரியர்கள் கொடூரமான தண்டனை வழங்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

மாணவனின் வளர்ச்சிக்கு கல்வி நிலையங்களே அடிப்படையாக உள்ளது. இத்தகைய கல்வி நிலையங்களில் அவ்வப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆசிரியரிடம் அடி வாங்கினால் நிச்சயம் பின்னாளில் பெரிய ஆளாய் வருவோம் என்ற எண்ணம் நம் முந்தைய தலைமுறையினருக்கு இருந்தது. என்னதான் அடித்தாலும் ஆசிரியர் - மாணவன் உறவு என்பது எந்த விரிசலும் இல்லாமல் சுமூகமாக உள்ளது.

ஆனால் இப்போதெல்லாம் ஆசிரியர் - மாணவர் உறவு என்பது மெச்சிக்கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்குவது, சக மாணவர்கள் முன்பு கேலி பேசுவது போன்ற விஷயங்கள் வளரும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்னையை உண்டாக்குகிறது. இதனால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பது, ஆசிரியர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியான நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. 

Continues below advertisement

தலைகீழாக தொங்க விடப்பட்ட அவலம்

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில்   ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள், வீட்டுப்பாடத்தை முடிக்காததற்காக நான்கு வயது மாணவனுக்கு கொடூரமான தண்டனை விதித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து குழப்பமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் இருந்த ஒரு மரத்தில் குழந்தையின் ஆடைகளை கழற்றி, கயிற்றால் கட்டி தொங்கவிட்ட சம்பவம் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பதிவு செய்துள்ளார். காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன் என்ற இரு ஆசிரியர்கள் அருகில் நின்று அந்த மாணவனை மிரட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்

மணிக்கணக்கில் உதவியற்ற நிலையில் தொங்கிய அந்த 4 வயது மாணவன் கடுமையாக அழுதுள்ளான், தன்னை கீழே இறக்குமாறு கதறியுள்ளான். பலமுறை ஆசிரியையிடம் கெஞ்சிய நிலையிலும் அவர் மாணவனின் வேண்டுகோளை புறக்கணித்து மோசமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தையான சந்தோஷ் குமார் சாஹு, பள்ளி நிர்வாகத்தின் மீது தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மனிதாபிமானமற்ற தண்டனைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. உடனடியாக வட்டார கல்வி அதிகாரி டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என கூறியிருந்தார். இதற்கிடையில் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய விவகாரத்தில் செய்தது தவறு தான் என பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவன் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்த சம்பவம் பெற்றோர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.