ஏபிபி நெட்வொர்க் சார்பில் 'தெற்கின் எழுச்சி' மாநாடு, அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. 'பொதுத் தேர்தல் 2024 - யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி' என்ற தலைப்பில் நடந்த விவாத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் பி.ஆர்.எஸ் கட்சி சட்டமேலவை உறுப்பினருமான கவிதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


ஏபிபி மாநாட்டை அலறவிட்ட கே.சி.ஆர் மகள் கவிதா:


இதில், அண்ணாமலையை நோக்கி கவிதா எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளத்தில் வைரலானது. மதுரை எய்ம்ஸ், தெலங்கானாவுக்கு சிறப்பு திட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, வாரிசு அரசியல் போன்ற விவகாரங்களில் சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்தார் கவிதா. ஏபிபி மாநாட்டில் நடந்த விவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. 


இந்த நிலையில், பிரிட்டனில் அமைந்துள்ள உலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தெலங்கானா மாடல் குறித்து கவிதா உரையாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை விடுத்த அழைப்பை ஏற்று, "அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி: தெலங்கானா மாடல்" என்ற தலைப்பில் அவர் பேசினார்.


அவர் பேசியது பின்வருமாறு, "தாய் நாடான பாரத மாதாவின் தவிர்க்க முடியாத எழுச்சியில், தெலங்கானாவின் சிற்பியான கே.சி.ஆர் போன்ற உண்மையான அரசியல்வாதிகளின் தலைமையில், நமது சக குடிமக்கள் அனைவருக்கும் மிகவும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன்.


ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேசியது என்ன?


இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது, சுதந்திரமான முறையில் தொழில் செய்வதற்கான கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது,  செல்வத்தை சமமாக பகிர்ந்து கொள்வது, நடைமுறைக்கு ஏற்ற பொருளாதார கொள்கையை பின்பற்றுவது, அரவணைக்கும் நிர்வாகத்தை உருவாக்குவது ஆகியவையே தெலங்கானா மாடலின் அடிப்படை நெறிமுறைகளாகும்.


3.5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட காலேஸ்வரம் பாசனத் திட்டம், பகீரதா திட்டம் மற்றும் மின் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடு ஆகியவை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன" என்றார்.


தெலங்கானாவில் விவசாயத் துறையின் மறுமலர்ச்சி குறித்து பேசிய அவர், "2014-15இல் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் இருந்து நிலையான மேல்நோக்கிய பாதையில் தெலங்கானா வெற்றிநடை போட்டு வருகிறது. 2022-23 இல், விவசாயத் துறை 15.7 சதவிகிதம் வளர்ச்சி கண்டது.


நலத்திட்டங்களை பொறுத்தவரையில், விவசாயி பந்து, விவசாயி பீமா மற்றும் தலித் பந்து போன்ற திட்டங்கள் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அனைத்து சமூகப் பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. விவசாய மறுமலர்ச்சிக்கான தெலங்கானாவின் முழுமையான அணுகுமுறை, TS-iPass போன்ற முன்முயற்சிகள் மூலம் தொழில்துறை வசதிகள், புதுமையான திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தியது ஆகியவை மாநிலத்தின் வளர்ந்து வரும் பொருளாதாரக் குறியீடுகளை உந்தித் தள்ளியது.


சமமான வருமான விநியோகத்தில் தெலங்கானா அனைத்து மாநிலங்களை காட்டிலும் 1வது இடத்தில் உள்ளது. வருமான விநியோகத்தில் சமத்துவமின்மையின் அளவு நார்டிக் நாடுகளுக்கு இணையாக 0.10இல் உள்ளது" என்றார்.


மேலும் பேசிய அவர், “தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் நவீன சாணக்கியர். தனி மாநிலத்தை அடைய காந்தியின் அகிம்சை வழியை கேசிஆர் பின்பற்றி வருகிறார். தெலுங்கானா மக்கள் மூன்றாவது முறையாக வளர்ச்சி மையமான கேசிஆர் ஆட்சிக்கு வாக்களிப்பார்கள்” என்றார்.